



எப்போதும்போல நேற்றிரவு உன் கனவுக்காகத் தூங்கியபடி காத்திருந்தேன். ஆனால், நீ
வருவதற்கு முன், எப்படியோ என் கனவுக்குள் நுழைந்துவிட்ட கடவுள், என்னைப்
பார்த்து, குழந்தாய்... உனக்கு என்ன வேண்டும்? என்று அவருக்கே உரிய தோரணையுடன்
கேட்டார்.
எனக்கோ கோபம் தலைக்கேறி, யார் நீ? உன்னை யார் என் கனவுக்குள் அனுமதித்தது?
உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைக்
கேட்காமலே எனக்கு வாரி வழங்குகிற தேவதை ஒருத்தி இருக்கிறாள். வெளியே போ! அவள்
வருகிற நேரமிது என வெடுக்கென்று சொல்லிவிட்டேன்.
உடனே கடவுளுக்குக் கோபம் வந்து, என்னை எரிக்கப் பார்த்தார். உன் அரவணைப்பில்
இருக்கும் என்னை எரித்துவிட முடியுமா அவரால்? தன் வரலாற்றில் ஏற்பட்ட முதல்
தோல்வியை மறைக்க முடியாமல், முகம் எல்லாம் வேர்த்துக்கொட்ட, மறைந்துவிட்டார்
கடவுள்.
ஆனாலும் இந்தக் கடவுளுக்கு கர்வம் அதிகம். எல்லோருக்கும் எல்லாமும் நாம்தாம்
என்கிற நினைப்போடு சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் பிறருக்கு வேண்டுமானால்
எல்லாமுமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனக்கு எல்லாம் நீதான்!
இந்தக் கடவுள் உன்னிடம் வந்தால் அவரைக் கொஞ்சம் கண்டித்து வை,'என்னவருக்கு என்ன
வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.இனி அவரைத் தொந்தரவு செய்யாதே!
என்று.
மார்கழி மாதக் கோலத்துக்குச் சூட்டுவதற்காக என் அம்மா உன் வீட்டில் பூசணிப் பூ வாங்கிவரச்
சொல்லுவார்.
நான் வாங்க வரும்போது, நீ என் அம்மாவுக்கு இரண்டு பூசணிப் பூக்களும், எனக்கு ஒரு
புன்னகைப் பூவும் தருவாய். என்னிடமிருந்து படிப்பதற்காக வாங்கிப் போகும் வார இதழ்களில்
இருக்கும் ஆடைக்குறைவான பெண்களுக்கு ஆடை வரைந்து திருப்பிக் கொடுப்பாய்.
பொங்கலன்று... நாங்கள் கட்டிக் கொண்டிருந்த புது வீட்டைப் பார்க்க வருமாறு உன்னை அழைத்தேன்.
நீயும் வந்தாய். வீட்டின் ஒவ்வொரு அறையாக உனக்குக் காட்டிவிட்டு, என்னுடைய அறை இருக்கும்
இடத்துக்கு உன்னை அழைத்து வந்தேன்.
அதில், அப்போதுதான் தரைப் பூச்சு முடிந்திருந்தது. நான் வெளியே நின்றுகொண்டு, இதுதான்
என் அறை. உள்ளே போய்ப் பார்! என்றேன்.
உள்ளே காலடி எடுத்து வைத்த நீ, உன் பாதம் ஈரத்தரையில் பதிந்ததைப் பார்த்துவிட்டு,
அச்சச்சோ... என்று பதறினாய்.
பதறாதே... உன்னை அழைத்து வந்ததே அதற்குத்தான்! என்றேன்.
நீ வெட்கத்தைக் கொட்டிவிட்டு ஓடிப் போனாய். உன் வெட்கத்தில் என் வீடு சுபிட்சம் அடைந்தது.
ஆனால், அடுத்த நாள் நடந்த ஜல்லிக்கட்டில்... இந்தக் காளையை அடக்குபவருக்குத் தான் என் பெண்!
என்று உன் தந்தை அறிவித்ததைக் கண்டு, நான் பதறிப் போனேன்.
நீ வளர்த்த அந்தக் காளையை அடக்க, யார் யாரோ பாய்ந்தார்கள். ஆனால், அனைவரை யும் புரட்டி
எடுத்து விட்டது உன் காளை!
கடைசியில், நான் இறங்கப் போனேன். நீ கொஞ்சம் பொறு! என்று ஜாடை செய்துவிட்டு, உன்
ரிப்பனில் ஒன்றை உருவி, ஒரு சிறுமியிடம் கொடுத்து அனுப்பினாய், ரகசியமாக!
அதை வாங்கிக்கையில் கட்டிக்கொண்டு இறங்கிய என்னிடம் உனது காளை அடங்கிப்போனது! அது உன்
வாசத்துக்குக் கட்டுப்பட்டது என்பதை அறியாமல், என் வீரத்தை மெச்சினார்கள் ஊர்மக்களும் உன்
அப்பனும்!
நம் காதலை உங்கள்
குடும்பம்
ஏற்றுக்கொண்டுவிட்ட
ரம்மியமான காலமது! உங்கள்
குலதெய்வக் கோயிலுக்குப்
போக என்னையும்
அழைத்திருந்தார் உன்
தந்தை.
உன்னை மாதிரியே உன்
குலதெய்வம்கூட
அழகாகத்தான் இருக்கிறது!
என்று உன் காதில் சொன்னபடி,
குலதெய்வத்துக்கு ஒரு
கும்பிடு போட்டுவிட்டுக்
கோயிலைச் சுற்றுகையில்,
உன் தந்தை என்னைப்
பார்த்து, உங்கள்
குலதெய்வம் எது? என்று
கேட்டார்.
நான் உன்னைக் காட்டி, இதோ!
என்றேன்.
உன் குடும்பத்தின் கேலிச்
சிரிப்பொலிக்கு நடுவே நீ
ஐயோ என்று முகத்தை
மூடிக்கொண்டு, கோயில்
வாசலிலேயே உட்கார்ந்து
விட்டாய்.
நான்உன் அருகில்வந்து,
நேரமாகிவிட்டது... வா,
போகலாம்! என்றேன்.
நான் வரலை! என்று
சிணுங்கினாய்.
ஐயையோ... நீ இங்கேயே
இருந்துவிட்டால்,
இங்கிருக்கும் தெய்வம்
எங்கே போவது?
வேண்டுமென்றால் சொல்...
இதைவிட அழகிய கோயிலாக, நான்
கட்டித் தருகிறேன்!
என்றேன்.
ஐயோ அப்பா... என்னைக்
காப்பாத்துங்கப்பா! என்று
கத்தியபடியே எழுந்து
ஓடிப்போய், உன்
தந்தைக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டாய்.
உன் தந்தை போதும் என்று
கண்டிப்புடன் சொன்னாலும்,
தன் பெண் நல்ல பையனைத்தான்
தேர்ந்தெடுத்திருக்கிறாள்
என்கிற பெருமை அவர்
முகத்தில் தாண்டவமாடியது.
நான் பெருமகிழ்ச்சி
கொண்டு, கோயிலுக்குள்
இருக்கும் தெய்வத்தைத்
திரும்பிப் பார்த்தேன்.
தெய்வமோ, என்
சந்நிதானத்தில் என்ன
விளையாட்டு இது?
என்பதுபோல் பொய்க்கோபம்
கொண்டு என்னை முறைத்துப்
பார்த்தது
"நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய். "
"எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு. "
"
தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!
உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா? "
தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!
உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?
*****************
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது|
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!
*****************
இந்தா என் இதயம்.
அதை நீ
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத்தூக்கிப் போட்டுவிடு.
அது
அதற்குத்தான்
படைக்கப்பட்டது!
*****************
கர்ப்பக் கிரகம்
தன்னைத்தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா என்ன?
நீ சொம்பில் நீரெடுத்து
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னை நானே
*****************
யாராவது
ஏதாவது
அதிர்ச்சியான
செய்தி சொன்னால்
அச்சச்சோ என்று
நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.
நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்!
*****************
ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
எனக்கு உன்னைக் காட்டியது.
குழந்தை பரவசமாய்
நிலவைப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
தாய், தன் குழந்தையின்
வாய்க்குள்
உணவை ஊட்டுவது மாதிரி
நான் உன்னைப் பரவசமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கையில்...
காதல்
எனக்குள் ஊட்டியதுதான்
இந்த வாழ்க்கை!
*****************
நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க
முடிகிறது!
ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்...
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது
வானம்!
*****************
நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.
நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன.
ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!
*****************
முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்.
*****************
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்..?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,
போதும்!
*****************
உன் கண்கள்
தானம் செய்ததுதான்
இந்தக் காதல்!
*****************
என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ
*****************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது
*****************
நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.
*****************
நான்
உன்னைக் காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது
*****************
என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.
*****************
நீ
உன் தோழிகளோடு
கைப் பந்து
ஆடுவதுதான்
எனக்குத்
திருவிளையாடல்.
*****************
அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்.
*****************
அன்று
நீ குடை
விரித்ததற்காகக்
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால்
நீ எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்
கொள்கிறேன்.
*****************
புத்தர் இந்த உலகத்தில் தோன்றி
ஒரு மார்க்கத்தைத்தான்
அமைத்துக் கொடுத்தார்.
நீயோ என் எதிரில் தோன்றி
எனக்கொரு உலகத்தையே
அமைத்துக் கொடுத்துவிட்டாய்
*****************
உன்னை எப்படித்தான் உன் வீடு தாங்குகிறது?
நீ சிரிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
நீ குளிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
அதைவிட
நீ தூங்கும்போது என்னதான் செய்யும் உன் வீடு?
*****************
என் மனதைக் கொத்தி கொத்தி
கூடு கட்டி
குடியும் ஏறிவிட்ட
மனங்கொத்திப் பறவை நீ
*****************
கடவுள் குடியிருக்கக் கோயிலாகக்கூட
இருந்துவிட முடியும்!
ஆனால்,
நீ குடியிருக்க வீடாக இருப்பது
முடியவே முடியாது என்பதை
நிரூபித்துக்கொண்டே இருக்கிறது |
நீ குடியிருக்கும்
என் இதயம்!
*****************
நீ உன் முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கி விடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்க வந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்.
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்ததும்
சிலையாக நின்று விடுகிறேன்.
*****************
காதல்தான்
நான் செய்யும் தவம்.
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்தத் தெய்வமும்
என்னைக் கேட்காமலிருக்கட்டும்.
*****************
நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை.
*****************
என் தவத்தைவிடச்
சிறந்ததாய்
எந்த வரத்தையும்
எந்தத் தெய்வத்தாலும்
தந்துவிட முடியாது!